ஞாயிறு, 22 நவம்பர், 2015

பிரம்மிக்க வைத்த தீப்பிழம்பு

அத்திரி மகரிஷியும்,அனுசுயாவும் சதுரகிரிக்கு புறப்பட்டுச் சென்ற சிறிதுநேரத்தில்,எதிர்பாராத விதமாக அங்கு வந்தனர்.
அருணாச்சலேஸ்வரரும்,உண்ணாமுலை அம்மனும் !

அவர்களை பாத்த மாத்திரத்தில் பரவசம் ஆனார் அகத்தியர்.அப்போது அருணாச்சலேஸ்வரர் சற்று கோபமாக காணப்பட்டார்.

“என்ன அகத்தியரே....எல்லா சட்டத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டதுபோல் தெரிகிறதே....” என்றார் அருணாச்சலேஸ்வரர் சற்று கிண்டலாக !

“அப்படியொன்றும் இல்லை முக்கண்ணா ! “

“அப்படியென்றால் அத்திரி மகரிஷியின் தவத்தை நிறுத்தி,அவர் விரும்பியபடி அனுசுயாவை வரவழைத்து அவர்கள் இருவரையும் கணவன் – மனைவியாக மாற்றி சதுரகிரிக்கு அனுப்பி வைத்திருக்கிறீரே..இது என்ன நியாயம் அகத்தியா?”

“ஐயனே ! தங்களுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்பதற்காக தங்கள் பொறுப்பை அடியேன் ஏற்றுக்கொண்டேன்.எப்படி இருந்தாலும் அத்திரி ஒரு அற்புதமான சித்தன்.ஆலமரத்து விழுதில் அவன் தலைகிழாகத் தொங்கி தவம் செய்தபோது,அந்த ஆழம்விழுதை வெட்டி தாங்கள் சோதனை செய்தீர்கள்.அதையும் அவன்,தன் தவ வலிமை கொண்டு வென்றான் அல்லவா?

“ஆமாம் ! “

“அப்படிப்பட்டவனை மேலும் எதற்குச் சோதனை செய்ய வேண்டும்? என்றுதான் முடிவெடுத்தேன். அத்திரி மகரிஷிக்கும் -  அனுசுயாதேவிக்கும் பிறக்கின்ற வாரிசு பற்றி தங்களுக்கு நன்றாகவேத் தெரியும்.அதனால்தான் அத்திரி மகரிஷிக்கு உதவி செய்தேன்.அது தவறாக இருந்தால் அகத்தியனை மன்னித்து விடுங்கள் அய்யனே..” என்று அகத்தியர் சொன்னபிறகு அருணாச்சலேஸ்வரர் அமைதியானார்.

சில நொடிகள் கழிந்தது.

“அருணாச்சலேஸ்வரா..” அகத்தியரே தொடர்ந்தார்.

“ம்ம்”

“இங்கே எராளமான சித்தர்கள் கூடி இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் தங்களுடைய சித்தத் திறமையை தங்கள் முன் காட்ட வேண்டும் என்று வெகுகாலமாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அதுவும் அண்ணாமலைக் காட்டில் தங்கள் மற்றும் தேவி உண்ணாமுலையம்மன் முன்னிலையில் வெளிப்படுத்தி,தங்கள இருவரது ஆசிர்வாதத்தையும் பெற விரும்புகிறார்கள்....”

“மிக்க மகிழ்ச்சி !”

“தாங்கள் அனுமதி கொடுத்தால் இங்குள்ள நந்தவனத்திலோ அல்லது மலை உச்சியிலோ   அவர்கள் தங்கள் சித்தத் தன்மைகளைக் காட்டுவார்கள்.தங்களது உத்தரவுக்காக காத்திருக்கிறோம்...”

“எத்தனை சித்தர்கள் இங்கு உள்ளனர் ?”

“2௦5 பேர்”

“இவர்கள் எல்லோரும் ஒரே சித்து வேலையைத்தானே காட்டப் போகிறார்கள்?”

“இல்லை முக்கண்ணா..இந்த 2௦5 சித்தர்களும் தங்கள் கருணையால் பல்வேறு அற்புதங்கள் செய்யக்கூடியவர்கள் .ஒவ்வொருச் சித்தரும் ஒவ்வொரு வகையில் கொடிகட்டிப் பறப்பவர்கள்...”

“எல்லோரையும் நான் காண இயலாது.அவர்களின் மிகவும் திறமை பெற்ற சித்தர்களை மட்டும் அழைத்து வா ...”

“சித்தர்களுக்கு எல்லாம் தலைமைச் சித்தராகிய தாங்கள் வழியைத் தொடரும் சித்தர்களை ஏற்றம்-இறக்கம் பார்க்க,பிரிக்க என்னால் இயலாது.கொஞ்சம் பொறுமை காட்டுங்கள்...”

“எல்லாம் சரி அகத்தியா... 

அத்திரி மகரிஷி என்னிடம் வாக்குவாதம் செய்து போராடி,தன் சித்தத் தன்மையை இழக்க முன்வந்தார்.இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார்.அவர் வேண்டுகோளை மீறமுடியவில்லை.வாக்குகுறுதி கொடுத்தேன்.இதேபோல், இங்குள்ள எல்லாச் சித்தர்களும் என்முன் வந்து ஏதேனும் வரம் கேட்டால் என்பாடு என்ன ஆவது? அதனால்தான் நான் பயப்படுகிறேன்...” என்றார் அருணாச்சலேஸ்வரர்.

இதைக் கேட்டு கடகடவென்று சிரித்தாள் அருகில் இருந்த தேவி உண்ணாமுலையம்மன்.

“ஏன் சிரித்தாய்? – அருணாச்சலேஸ்வரர் கேட்டார்.

“சுவாமி ! உலகமெல்லாம் தங்களது சக்தியைக் கண்டு பயப்படுகிறது.எங்கே தங்களது முக்கண் திறக்கப்பட்டு விடுமோ என்று கதிகலங்கி நிற்கிறது.அப்படியிருக்க ...தாங்கள் இந்த சித்தர்களை கண்டு பயப்படுகிறேன் என்று சொன்னபோது எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.அதனால்தான் சிரித்துவிட்டேன்” என்றாள் தேவி.

“முக்கண்ணா தாங்கள் நினைப்பதுபோல் இங்குள்ள சித்தர்கள் யாரும் தங்களிடம் ஒரு போதும் வரம் கேட்டு தொந்தரவு செய்யமாட்டார்கள்.இதற்கு யாம் பொறுப்பேற்கிறோம்.ஆனால் ஒன்று..”என்று இழுத்தார் அகத்தியர்.

“என்ன?”

“ஒருவேளை,தங்கள் முன்பு இந்த சித்தர்கள் செய்யப்போகும் சித்து விளையாட்டைக் கண்டு தாங்களே ஆசைப்பட்டு வரம் கொடுத்துவிட்டால் அதற்க்கு அகத்தியன் பொறுப்பேற்க முடியாது.” என்று பவ்வியமாகச் சொன்னார் அகத்தியர்.

“அகத்தியரே ! நீங்கள் சொல்வதும் சரி.என்னையும் அறியாமல் அப்படிப்பட்ட தவறுகளைச் செய்திருக்கிறேன்.ம்ம்ம்...பார்ப்போம்..”

“அப்படியென்றால்,என்றைக்கு சித்தர்களை அங்கு வரச் சொல்வது?”

“அகத்தியரே ! இந்த வனம் ஏறத்தாழ நான்கு புறமும் நூறு காத தூரம் கொண்டது.வனத்தின் நடுவில் இருக்கும் மிருகங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.நந்தவனமும் கெடக்கூடாது.ஒன்று செய்..இங்குள்ள மலை உச்சிக்கு சென்று விடலாம்.இன்னும் சிலநாளில் கார்த்திகை நட்சத்திரம் வருகிறது.கார்த்திகை விழாவை முடித்து விட்டு ,11 நாட்கள் நானும்,உண்ணாமுலை அம்மனும் மலை உச்சிக்கு வருகிறோம்...”
அப்படியே ஆகட்டும் அய்யனே !” என்றார் அகத்தியர்.

அடுத்த நொடியே...

அருணாச்சலேஸ்வரரும்,உண்ணாமுலை அம்மனும் கருவறைக்குள் நுழைந்து மறைந்தனர்.

அதைத்தொடர்ந்து,தனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த சித்தர்களைப் பார்த்த அகத்தியர்,கார்த்திகை நட்சத்திரம் கழிந்த பிறகு அங்குள்ள மலை உச்சிக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.

“சிவபெருமான் முன்னிலையில் உங்களது சித்து வேலையைச் செய்து காட்டுங்கள்.இது போன்ற ஒரு அருமையான வாய்ப்பு கடந்த மூவாயிரம் ஆண்டுகாலமாக ஏற்பட்டதில்லை.அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.ஆனால் யாரும் நேரடியாக சென்று எந்த வரமும் கேட்கக்கூடாது.வெகுமதியும் கேட்கக்கூடாது....” என்றும் சித்தர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் எல்லா சித்தர்களுக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி.கரகோஷம் எழுப்பினார்கள்.

தாங்கள் அற்புதம் நிகழ்த்தப்போகும் அந்த இனிய நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர்.

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வந்தது.அகத்தியர் உட்பட அனைத்து சித்தர்களும்,மகரிஷிகளும்,முனிவர்களும்,தேவலோகத்து தேவர்களும் மற்றும் பிரம்மா,விஷ்ணுவும் அங்கு ஆவலோடு கூடியிருந்தனர்.

அன்றைய தினம் மாலைநேரம் –

கிழக்கு வானில் சந்திரன் தன் பூரண சந்தோஷ முகத்தோடு மெல்ல வெளியே வந்தான்.தெய்வீகத் தன்மை மலையில் மொத்தமாக கூடியிருந்தது.மந்திர கோஷங்கள் மெல்ல மெல்ல மலையைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தன.

அப்போது அருணாச்சலேஸ்வரர் தன் தேவி உண்ணாமுலையம்மனோடு மலை உச்சிக்கு வந்தார்.எல்லா தேவர்களும் எழுந்து நின்று முக்கண்ணனையும்,தேவியையும் அன்போடும்,பக்தியோடும் வரவேற்று வெண்சங்கு ஊதினர்.மத்தளத்தை நந்திதேவர் வாசிக்க...யாழைக் கொண்டு நாரதர் மங்கள கானம்பாட...வானத்திலிருந்து தேவர்கள் மலர்மாலைகளைத் தூவ...திருவண்ணாமலை கோலாகலமாக ஒளிபெற்று காணப்பட்டது.

எல்லோரையும் வரவேற்ற அகத்தியர் ,சித்து வேலையை காண்பிக்க முதலில் மச்சமுனிவரை அழைத்தார்.

“இதோ வந்துவிட்டேன் ...”என்று மச்சமுனியின் குரல் கேட்டது.ஆனால் அவரைக் காணவில்லை.

‘எங்கே போனார் இந்த மச்சமுனி?’ என்று எல்லோரும் திகைத்து நிற்க ..சட்டென்று பூமியில் இருந்து நான்கு தீப்பிழம்பு தோன்றியது.
அந்த தீப்பிழம்பு நேராக வானத்தை நோக்கி வெகுவேகமாக சென்றது.அது சென்றவேகத்தைப் பார்த்தால் வானத்தையே சுட்டெரித்து விடும்போல் இருந்தது.

எல்லோரும் தங்கள் விழிகளையும் வானத்தை நோக்கி உயர்த்திக் கொண்டிருக்கும்போது அந்த தீப்பிழம்பு வெகுவேகமாக அண்ணாமலை நோக்கி திரும்பியது.

சில விநாடிக்குப் பின் அது மலர்மாலையாக மாறி,சிவபெருமான்-உண்ணாமுலையம்மன் கழுத்தில் வந்து விழுந்தது.

(சித்தர்கள் வருவார்கள்...)